அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக "கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு" எனும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் புதிய கோப் பிறஸ் பல்பொருள் விற்பனை நிலையங்கள் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டு வருகின்றன.
கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மாகாணத்திலுள்ள வினைத்திறன் மிக்க தெரிவு செய்யப்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் இவ் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
இதற்கமைவாக வியாழக்கிழமை (24) மாலை மண்முனை தென் எருவில் களுவாஞ்சிகுடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற கோப் பிறஸ் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இயக்குநர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.