சுமார் 19 மில்லியன் ரூபா பெறுமதியான ( ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா) குஷ் மற்றும் கொக்கைன் போதைப் பொருட்கள், கொழும்பு மத்திய அஞ்சல் பறிமாற்று நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து அனுப்பட்டிருந்த 5 சந்தேகத்துக்கு இடமான பொதிகளை நேற்று (8) சோதனை செய்தபோது அவற்றில் இருந்து இவற்றைக் கைப்பற்றியதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் ( சட்டம்) சுதத்த சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய அமரிக்கா, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து, கொழும்பின் 5 முகவரிகளைக் குறிப்பிட்டு இந்த பொதிகள் கொழும்பு மத்திய அஞ்சல் பறிமாற்று நிலையத்துக்கு அனுப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சந்தேகத்துக்கு இடமான அந்த பொதிகளை சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் நேற்று சோதனை செய்துள்ளனர்.
இதன்போது குஷ் எனும் ஒருவகை கஞ்சா போதைப் பொருள் ஒரு கிலோவை அண்மித்த அளவிலும், கொக்கைன் போதைப் பொருள் 50 கிராம் அளவிலும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர், மீட்கப்பட்ட போதைப் பொருளினை, மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் திணைக்களத்தினர், பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளித்துள்ளனர்.