சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வானது ஜனாதிபதி தலைமையில் இன்று (23) திகதி இடம்பெற்றது.
இன்றைய தினம் ஜனாதிபதி விருதினை பொற தகுதியுடைய நாடு பூராகவும் உள்ள அனைத்து சாரணர்களையும் ஒரே இடத்திற்கு அழைக்க முடியாத கொவிட் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு
ஜனாதிபதி விருதினை வழங்கி வைக்கும் குறித்த நிகழ்வானது நிகழ்நிலை (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து சாரணர்களையும் ஒருமித்து இடம்பெற்றிருந்தது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 44 சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இன்று (23) மாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்ட செயலாளருமான கே.கருணாகரனும் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவுளியூ.ஜீ.திசாநாயக்கா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். பிள்ளைநாயகம் அவர்களும் கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினராக விசேட ஆணையாளர் அமிர்தன் கார்மேகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபன், மற்றும் உதவி மாவட்ட ஆணையாளர்கள், குழு சாரணத்தலைவர்கள், பெற்றோர்கள், விருதுபெறும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 2022ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஆண் சாரணர்களும், பெண் சாரணர்களுமாக மொத்தமாக 44 பேர் ஜனாதிபதி சாரண விருது பெற்றிருந்தார்கள். இவர்களுக்கான ஜனாதிபதி சாரண விருது அதிதிகளினால் அணிவிக்கப்பட்டது. இதன்போது பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஞாபகார்த்த பரிசும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நிகழ்நிலை ஊடாக இடம்பெற்ற நிகழ்வின்போது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி விருதிற்கு தெரிவாகி சின்னங்களை பெற்றுக்கொண்ட சாரணியர்களை வாழ்த்தியிருந்ததுடன், குறித்த நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதான ஆணையாளரும், சட்டத்தரணியுமான ஜனபிரித் பெர்னாண்டோவும் கலந்து கொண்டிருந்தார்.