நாட்டில் ஏற்பட்டுள்ள கஸ்ட நிலைமைகள் நீங்கவும் நாடும் அரசும் சிறக்கவும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிலவ வருட மந்திரகல்ப்ப மகா யாகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் புனித தினமான மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் நோய் நொடியின்றி எல்லா மக்களும் மகிழ்ச்சியாக வாழ சிவனை வேண்டி இந்த யாகம் நடாத்தப்படுகின்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் இந்த மகா யாகம் நடாத்தப்படுகின்றது.
நேற்று மாலை மணிக்கு கணபதி ஹோமத்துடன் கிரிகைகள் ஆரம்பமாகியதுடன் விசேட பூஜைகள் நடைபெற்று 94க்கும் மேற்பட்ட மூலிகைகள் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து மந்திரகல்ப்ப மகா யாகம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது மூலமூர்த்தியாகிய மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறும் இந்த யாகத்தினை சிறப்பிக்கும் வகையில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தல விருட்சத்திற்கும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அங்கிருந்து மண் எடுத்துவரப்பட்டு யாக குண்டத்தில் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி தினமன்று இறுதியாகம் நடைபெறவுள்ளதுடன் தினமும் ஆலயத்தில்
அதிகாலை 3.30 மணி தொடக்கம் 108 சங்காபிஷேகம், 5.30 மணிக்கு விஷேட மகாயாகம், 7.30 மணிக்கு பிரசாதம் வழங்கல்
தொடர்ந்து பிற்பகல் 4.00 மணிக்கு 108 சங்காபிஷேகம், 5.30 மணிக்கு பூஜையைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு
மகாயாகம் நடைபெற்று 8.00 மணிக்கு யாகம் நிறைவுபெறும்.
இந்த விசேட மந்திரகல்ப மஹா யாகத்தில் பக்தர்களை சுகாதார நடைமுறைகளைப்பேணி கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.