மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சமூர்த்தி வங்கி வீதி, தாண்டியடியில் எஸ்.எல்.ஜவாத் என்பவரின் தோட்டத்திற்குள் செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்து பெறுமதியான தென்னைகளைச் சேதப்படுத்தியுள்ளதுடன், தென்னையிலிருந்த இளநீர் போன்றவற்றையும் கள்வர்களும் திருடிச் சென்றுள்ளனர்.
இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், பெறுமதியான தென்னை, மா, பலா போன்ற மரங்களும் காய்கறிப் பயிர்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் சுமார் பத்துக்கும் அதிகமான வளர்ந்த தென்னைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுவேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பிரதேசத்தில் வதியும் மக்கள் உயிரச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருவதுடன், பாரிய நஷ்டங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
இப்பிரதேசத்திற்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையினால் தொடர்ச்சியாக இவ்வாறான அழிவுகளைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து உயிர்களையும் பயிர்களையும் பாதுகாக்க உதவ வேண்டுமென இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.