ஒன்றரை மாதத்தில் 9000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள்- வெளியாகிய அதிர்ச்சி செய்தி...!!


நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அதாவது சுமார் ஒன்றரை மாதங்களில் 9000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு வைரஸ் பிரிவுகள் பல உருவாகியுள்ளமையே இவ்வாறு அதிகளவில் நோயாளர்கள் இனங்காணப்படக் காரணம் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் இதுவரையில் அதாவது கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 9609 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 48 வீதமானோர் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.

மேல் மாகாணத்தின் களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாகாணங்களிலுள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம் , புத்தளம் , காலி, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

டெங்கு வைரஸின் பிரிவுகள் பல உருவாகியுள்ளமையே இதற்கான காரணம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் டெங்கு நோய் ஏற்பட்டாலும் அறிகுறிகளை காண்பிக்கும் காலத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே காய்ச்சல், தடிமன் உள்ளிட்ட அறிகுறிகள் 48 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

அத்தோடு அனைவரும் டெங்கு நுளம்பு பரவ இடமளிக்காத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றார்