மின்சார சபை விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை...!!


இன்று இரவு தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மாலை 6.30 முதல் 8.30 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின் நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்திற்கான அதிகபட்ச தேவை நிலவும் சந்தர்ப்பத்தில் இந்நாட்களில் மின்சாரத்துக்கான கேள்வி 2800 மெகாவோட்டாக உள்ளது.

எனவே, தற்போது நாட்டில் உள்ள அனைத்து நீர் மின்நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களினால் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம் மூலம் மின் வெட்டும் இல்லாமல் குறித்த கேள்வி பூர்த்தி செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையங்களை அண்மித்துள்ள 162 மெகாவோட் மின் உற்பத்தி நிலையம் அவசர பராமரிப்புக்காக நேற்று மூடப்பட்டது.

இந்த சூழ்நிலையால் மின் உற்பத்தி சமநிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அனல் மின் நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 31ஆம் திகதி வரை மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படமாட்டாதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

அதன்படி, குறித்த தினத்தின் நிலைவரத்தை ஆய்வு செய்து, தொடர்ந்தும் மின்வெட்டுக்கான அனுமதி வழங்குவதா இல்லையா என்ற என்பது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.