2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2022 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை அடைவதற்காக இலங்கைப் பொருளாதார எதிர்காலக் கண்ணோட்டங்கள் ( External Outlook ) தொடர்பாக கீழ்வரும் தகவல்கள் விபரமாக நிதி அமைச்சர் அவர்களால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
• வெளிநாட்டுக் கடன் செலுத்தல் மற்றும் எதிர்பார்க்கப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகள் இறக்குமதிக்கான செலவு உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி தொடர்பான தகவல்கள்
• ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை மூலமான வருமானம், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம், நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் அந்நிய செலாவணி விபரம்.
• எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால படிமுறை முன்மொழிவுகள்.
• நிலவுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்புக் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சலுகைகள் கீழ்வருமாறு:
(i) அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5,000/- ரூபா வீதம் மாதாந்தக் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்
(ii) தனியார் துறையின் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடி குறித்த சலுகையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்
(iii) 3,500/- ரூபா மாதாந்தக் கொடுப்பனவாகப் பெறும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு மேலதிகமாக 1,000/- கொடுப்பனவை வழங்கல், குறித்த கொடுப்பனவை ஏனைய சமுர்த்திப் பயனாளிகளுக்கும் வழங்கல்
(iv) எதிர்வரும் போகத்தில் நெல் அறுவடையில் ஏதேனும் விளைச்சல் குறையுமாயின், தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்தப்படும் 50/- ரூபா உத்தரவாத விலையை ஒரு கிலோவுக்கு 25/- ரூபாவால் அதிகரித்து வழங்கல்
(v) சந்தையில் அரிசி விலையில் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறு செலுத்தப்படும் மேலதிக தொகை அரசாங்கத்தால் பொறுப்பேற்றல்
(vi) தமது நுகர்வுக்குத் தேவையான மரக்கறிகள் மற்றும் பழவகைச் செய்கையை ஊக்குவிப்பதற்காக வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், அதற்குத் தேவையான நிலத்தைப் பண்படுத்துதல், விதைகளை கொள்வனவு செய்தல் போன்ற இடுபொருட்களுக்காக காணியின் அளவுக்கு ஏற்ப ஒரு ஏக்கர் வரைக்கும் உயர்ந்தபட்சம் 10,000/- ஊக்குவிப்புத் தொகையை வழங்கல்
(vii) தோட்டத்தொழிலாளர் குடும்பமொன்றுக்கு ஒரு கிலோக்கிராம் கோதுமை மா 80/- ரூபாவுக்கு 15 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கல்
(viii) தேவையான சந்தர்ப்பங்களில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக முழுமையான வரிவிலக்கு செய்தல்
நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த மேற்படி யோசனைகள் அடங்கிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.