ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்; அரச உத்தியோகத்தர்களின் அரச சேவை உறுதிமொழியினை ஏற்கும் சத்தியபிரமாண நிகழ்வும்


(வி.சுகிர்தகுமார்)

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்; அரச உத்தியோகத்தர்களின் அரச சேவை உறுதிமொழியினை ஏற்கும் வருட ஆரம்ப
 சத்தியபிரமாண நிகழ்வும் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இன்று காலை இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கிளைத்தலைவர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கொடியினை பிரதேச செயலாளர் ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து இராணுவ வீரர்கள் உள்ளிட்ட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூரும் நிகழ்வும் அரச சேவை உறுதிமொழியினை ஏற்கும் சத்தியபிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.

இதன் பின்னராக சர்வமத தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதன் பின்னர் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய அதன் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அரச சேவையாளர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு தொடர்பில் பிரதேச செயலாளர் உரையாற்றினார்.

மக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டிய சேவைகள் தொடர்பிலும் கருத்துரைத்த அவர் கடந்த வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் வழங்கி பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.

இறுதியாக பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட புஜை வழிபாடுகளிலும் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.