கடலுக்குள் தொழிற்சாலை கழிவுநீர் அகற்றுவதான விவகாரம்- பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் ஜனா நேரில் சென்று ஆராய்வு

நாங்கள் தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கமாட்டோம்.ஆனால் ஒரு வளத்தினைக்கொண்டுவந்து இன்னுமொருவளத்தினை அழிப்பதை அனுமதிக்கமாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஏறாவுர் புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை தொடரட்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிக் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சென்றிருந்தார்.

இன்று குறித்த இடத்திற்கு அவர் விஜயம் ஒன்றிணை மேற்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் குறித்தும் பார்வையிட்டார்.

அண்மைக்காலமாக ஊடகங்களின் ஊடாக வெளிவரும் தொழிற்சாலை கழிவு நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்படும் குழா இணைப்பு வேலைப்பாடு நடைபெறும் இடத்திற்கும் சென்று பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தான தகவல்கள் அங்கு கிடைத்ததுடன் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

குறித்த இடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலையின் கழிவினை சுத்திகரித்து கடலினுள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டாலும் கடலுடன் கலக்குமானால் கடல்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலையேற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு புன்னக்குடா கடற்பகுதியில் மர்ம குழாய்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மர்மம் விளங்கவில்லையென ஓரிரு நாட்களில் செய்திகளில் பார்த்தோம்.அதனை நேரடியாக கண்காணிப்பதற்காக இந்த பகுதிக்கு விஜயம்செய்தேன்.நாங்கள் இதற்குள் நுழையும் நுழைவாயிலில் இராணுவமுகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது.

குழாய்கள் கடலுக்குள் சுமார் 200மீற்றர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசினேன்.தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது.சுமார் 13கோடிரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புன்னக்குடா பகுதியில் சுமார் 200ஏக்கருக்கு அதிகமான பகுதி முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆடைத்தொழிற்சாலைக்கு மேலாக நூல்களுக்கு வர்ணம் சேர்க்கும் தொழிற்சாலையொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார்.கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டே கடலுக்குள் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபைதான் குறித்த சுத்திகரிப்பு செய்து கடலுக்குள் நீரை வெளியேற்றும்பொறுப்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தாங்கல்தான் அந்தவேலையை செய்வதாகவும் தொழிற்சாலைகளுக்குள் இருந்துவெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரித்த பின்னரே வெளியேற்றுவோம் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் குறித்த பகுதியில் கழிவுநீரை சுத்திகரித்து கடலுக்குள் வெளியேற்றவேண்டுமானால் கரைக்கு அருகாமையில் அதனைசெய்யலாம்.ஆனால் கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 200மீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு அந்த சுத்திகரிப்பு செய்த நீரைகொண்டுசென்று வெளியேற்றவேண்டிய தேவையில்லை.கடலுக்குள் நீண்டதூரத்திற்கு அந்த குழாய்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பது சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள பிரதேச,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் பேசவுள்ளேன்.

தொழிற்சாலைகள் எமது பிரதேசத்தினைநோக்கிவரவேண்டும்.அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எங்கள் கடமையல்ல.கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக எமது பிரதேச இளைஞர் யுவதிகள்வேலைவாய்ப்பின்றி மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகி;ன்றனர்.அந்த ரீதியில் தொழிற்சாலைகள் இங்கு வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த தொழிற்சாலைகள் இன்னொரு வளத்தினை கொடுத்து ஒரு வளத்தினை அழிப்பதாகயிருக்ககூடாது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்திசபை மற்றும் பனை உற்பத்தியாளர்களுக்கான பனை மூலப்பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியா இதுவுள்ளது.அதிகளவான பனைமரங்களைக்கொண்ட பகுதி.அந்த பனை மரங்கள் அழிக்கப்படக்கூடாது.

அதற்கு மேலாக கடல்நீர் சுத்திகரிக்கப்படாமல் கடலுக்குள் அனுப்பப்பட்டால் கடலை நம்பியுள்ள மீனவர்கள் பாதிக்கப்படும் நிலையேற்படும்.ஒருவளம் கொண்டுவருவதன் மூலம் இன்னுமொரு வளத்தினை அழிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.தொழிற்சாலைகள் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலிருக்கவேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு.அவ்வாறில்லாமல் மக்களை பாதிக்கும் வகையில் தொழிற்சாலைகள் வருமானால் நிச்சயமான இப்பகுதி மற்றும் மாவட்ட மக்களுடன் இணைந்து எதிர்ப்பினை தெரிவிப்போம்.