மாங்குளத்தில் நீதிமன்றம் திறந்து வைத்த நீதி அமைச்சர்…!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டடத் தொகுதியினை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (27) திறந்து வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் நிலபரப்பில் அதிகளவான நிலப்பரப்பாக காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மக்கள் மிகுந்த தூரங்களில் இருந்து வருகை தரும் போது அவர்களுடைய வழக்குகள் கூப்பிடப்பட்டு அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவங்கள் போன்ற பல்வேறு பாதிப்புகளை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் கடமையாற்றிய அதிகாரிகளின் அயராத முயற்சியின் பயனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பகாலத்தில் துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் காலப்போக்கில் மாங்குளத்தில் நிரந்தர கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்தது அந்த வகையிலே மாங்குளத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு தற்போது வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அங்கு வழக்கு விசாரணைகள் இடம் பெறுகின்றது.

குறிப்பாக மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வருகின்ற வழக்குகள் புதன்கிழமைகளில் இங்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியினை இன்றைய தினம் வைபவரீதியாக நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்தார்.

மாலை 3 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

காலப்போக்கில் குறித்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் வாரத்தின் 5 நாட்களும் இடம் பெறக்கூடிய வகையில் தனியாக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு குறித்த நீதிமன்றம் இயங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.