மட்டக்களப்பு மாநகர சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியில் முதலாம் வட்டாரத்திற்குட்பட்ட அமிர்தகழி சித்திவிநாயகர் ஆலய வீதியினை அபிவிருத்தி் செய்து ஒளியூட்டி அழகுபடுத்தும் பணிகள் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மழை காலங்களில் பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் பயணம் செய்ய முடியாத நிலையில் இவ் வீதி காணப்படுவதனால், மாநகர சபையின் உறுப்பினர் தம்பிராஜா இராஜேந்திரன் அவர்களின் முன்மொழிவிற்கிணங்க சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி வீதி அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவனுடன் இணைந்து மாநகர சபையின் உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார், மாநகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் கிறிஷ்டி ராஜ் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இத்துடன் குறித்த பகுதியில் வட்டார உறுப்பினர் தம்பிராஜா இராஜேந்திரன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மேற்கொள்ளப்பட்டு வரும் அமிர்தகழி வாசிகசாலைக்கான கட்டிடத்தினையும் இன்று மாநகர சபை முதல்வர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதோடு அப் பணிகளை துரிதமாக நிறைவுறுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.