திருகோணமலை- வெருகல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழர்களின் நெல் அறுவடை, பொங்கல் நிகழ்வுகளின் பாரம்பரியங்களை எடுத்துக் காட்டும் வகையிலான நெல் அறுவடையும், பொங்கல் நிகழ்வும் வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.முஹமட் கனி தலைமையில் இன்று வியாழக்கிழமை (20) வெருகல் ஈச்சிலம்பற்று பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது அதிதிகள் வயலுக்குச் சென்று பூஜை வழிபாடுகள் செய்து பாரம்பரிய முறைப்படி நெல்லறுத்து நெற்கதிர்களை மாட்டு வண்டியில் ஏற்றி வந்தனர்.
அதன்பின் பூஜை வழிபாடுகள் செய்து அம்மியில் வைத்து நெற்கதிர்களை அடித்து நெல்லினை எடுத்து , உரலில் வைத்து இடித்து அரிசியாக்கி பொங்கல் பானையில் வைத்து பொங்கல் செய்திருந்தனர். இந்நிகழ்வானது பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றிருந்தது.
இதன்போது வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விவசாய சங்கங்கள், சமூக அமைப்புக்கள் இணைந்து 100 பானைகளில் பொங்கல் பொங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாடிகோரள முதன்மை அதிதியாக கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக வெருகல் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், வெருகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.