கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டமூலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்டமூல நகலை கிழித்து தரையில் வீசினார்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டமூலம் மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது.
அதன்போது, இந்த சட்ட மூலத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்ததுடன், இச்சட்டம் மக்களுக்கு விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது என கூறியது.
அத்துடன், இந்த சட்டமூலத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக் கூடாது, திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த சட்டத்தை எதிர்த்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, சட்டமூலத்துக்கு எதிராக முழக்கமிட்டபடி அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
மதச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோதமாக ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதைத் தடுத்து உரிய சிறைத் தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழிவகைகள் செய்கிறது.