மெதடிஸ்த மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொரனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பாடசாலைகள் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் உயர்தரப்பிரிவில் தோற்றி சாதனைகளை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை மெதடிஸ்த்த மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பி.இளங்கோ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் வி.பவானந்தன்,மொரட்டு பல்கலைக்கழக ஆய்வாளர் பொறியியலாளர் கபீலா சுப்ரமணியம்,மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி சி.சுபாகரன் உட்பட பலர் பழைய மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2020ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களில் பொறியியல் பீடத்திற்கு 14மாணவர்களும் வர்த்தக பிரிவுக்கு 03மாணவர்களும், மருத்துவபீடத்திற்கு ஒரு மாணவரும்,தொழில்நுட்ப பீடத்திற்கு 02மாணவர்களும், ஏனைய துறைகளுக்கு 12மாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஓரே தடவையில் பாடசாலையில் பொறியியல் துறைக்கு 14மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் கோபிநாத் பாடசாலை சமூகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

கொவிட் காலப்பகுதியில் பல்வேறு மன அழுத்தங்களுக்குள்ளும் ஆளாகியிருந்த மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்வுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படுகின்றன.