மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்- பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்...!!


நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வத்ற்கு இடமளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூடும் இடங்களுக்கு கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனியார் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயமாக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி அட்டையினை சோதனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் பஸ் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு இயலுமான அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, பஸ்களுக்கான குத்தகை கடன் தவணைக் கொடுப்பனவு மற்றும் வீதி அனுமதி பத்திரம் தொடர்பில் சலுகை காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனிடையே, மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்றைய தினம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வார இறுதி நாள் என்பதனால், பயணிகளின் வருகை குறைவடையும் என்பதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பயணிகளும் நாளை முதல் ரயில் சேவையை பயன்படுத்த முடியும் ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரயில் சேவைகளில் நாளை முதல் பயணச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில் சேவைக்காக 150 இற்கும் மேற்பட்ட ரயில்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.