பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் கடினபந்து விளையாடுவதற்கு பிரதேசபையினால் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் விசேட அமர்வு இன்று காலை பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய சபை அமர்வானது பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வகையிலான விசேட அமர்வாக நடைபெற்றது.

இதன்போது பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானம் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான வாதங்கள் இடம்பெற்றன.

பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையினை நீக்கி அதன்பின்னர் குறித்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் குறித்த மைதானம் இன்னும் பிரதேச செயலகத்திற்கு சொந்தமாகவே இருப்பதனால் அதனை பிரதேசசபை விரைவாக பொறுப்பேற்கவேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் கே.வினோராஜ் கருத்து தெரிவித்தார்.

இதேபோன்று பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையினை உடனடியாக நீக்கிய பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு வேலிகளை அமைப்பது குறித்து நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கோட்டைக்கல்லாறு வட்டார உறுப்பினர் சுதாகரன் தனது கருத்தினை பதிவுசெய்தார்.

குறித்த விளையாட்டு மைதானத்தில் யாரும் விளையாடவேண்டாம் என்று கூறவில்லை.ஆனால் அருகில் உள்ள மக்கள் மற்றும் ஆலயத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திவிட்டு விளையாடுமாறே கூறுகின்றேன்.குறித்த பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.இது தொடர்பிலான கடிதங்களை பிரதேசமக்கள் பிரதேசசபைக்கு வழங்கியுள்ளனர்.அதனடிப்படையில் குறித்த மைதானத்தில் விளையாடும்போது பொதுமக்கள் பாதிக்காத வகையிலான நடவடிக்கைகளை எடுத்தபின்னரே தற்காலிக தடையினை நீக்கவேண்டும் என பெரியகல்லாறு வட்டார உறுப்பினர் எஸ்.கணேசநாதன் தெரிவித்தார்.

வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் குறித்த விளையாட்டு மைதானத்தின் தற்காலிக தடையினை நீக்கிய பின்னர் பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு 10 உறுப்பினர்கள் தெரிவித்திருந்த அதேநேரம் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னர் தடையினை நீக்கவேண்டும் என மூன்று உறுப்பினர்களும் இரு உறுப்பினர்கள் நடுநிலைவகித்த நிலையில் தற்காலிக தடையினை நீக்குவதற்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன்,

குறித்த பகுதியில் விளையாட்டு வீரர்கள் தங்களது மேம்பாட்டுக்காக விளையாடுவது மிக முக்கியமாகும்.அதேபோன்று அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமாகும்.இரண்டையினையும் நிறைவேற்றவேண்டிய கடமை எமக்கு உள்ளது.இந்த சபையில் விதிக்கப்பட்ட தற்காலிக தடையினை நீக்குவதற்கு உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதன் காரணமாக தடைநீக்கப்படுகின்றபோதிலும் குறித்த பகுதி மக்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கையெடுக்கவேண்டியது உறுப்பினர்கள் அனைவரினதும் கடமையென்பதுடன் அது தொடர்பான தெளிவினை அந்த மக்களையும் விளையாட்டுக்கழக உறுப்பினர்களையும் நேரடியாக சந்தித்து தெளிவுபடுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.