இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் அமரர்.சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் 47வது நினைவு தினம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மற்றும் அவரது குடும்பத்தினராலும் ஏற்பாடு செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடியில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு முன்பாக நினைவுகூறப்பட்டது.
சி.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளர் விமல் நாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மண்முனை தென்னெருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ், கட்சிபிரமுகர்கள், சி.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் கிராம மட்ட பிரதிநிதிகள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி 15 பேருக்குள் மட்டுப்படுத்தி இந் நிகழ்வினை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தமையினால் இந் நிகழ்வு 15 பேருக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
1913.01.20 திகதி பிறந்த சீ.மூ.இராசமாணிக்கம் என்ற ஆளுமை நிறைந்த மனிதர் தமிழரசு கட்சியின் தலைவராக 1961 தொடக்கம் 1964ம் ஆண்டுவரை செயற்பட்டவராவார்.
1960 ஆண்டு முதல் 1970ம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரதிநியாக பத்துவருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், சுமார் முப்பது வருட காலத்துக்கும் மேலாக சமூக சேவகனாகவும் அரும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.