சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சூழல் நேயமிக்கவர்களாக சிறுவர்களை உருவாக்க பிரதேச சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு பலாமரக்கன்றுகள் மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பிரிவினால் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான பலாமரக் கன்றுகளை இன்று (27) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

அனைத்திற்கும் முன்னுரிமை பிள்ளைகள் என்னும் தொனிப் பொருளின் அடிப்படையில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் இவ்வருடம் 2021 சிறார்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் மூலமாக இத்தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளது. 

அதனடிப்படையில் சிறார்களால் பதியமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு இலட்சம் பலாமரக் கன்றுகளை நடுவதற்காக பிரதேச செயலக ரீதியில் தலா 300 பலாமரக் கன்றுகளையும் சிறுவர் கழக சிறார்களுக்கு வழங்கி வைத்துள்ளது.

மேலும் அவற்றை பராமரிப்பதற்கான பொறுப்புக்களை சிறுவர்களுக்கு வழங்கியுள்ளதுடன் மேற்பார்வையினையும் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நட்புறவான இயற்கைச் சூழல் ஒன்று அமையவும், அவர்களது பற்கேற்பையும் பெற்றுக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சித்திரக் கதை, உரைச்சித்திரம், குறுக்கெழுத்து போட்டி, கவிதை, கட்டுரை, கார்ட்டுன் சித்திரம் வரைதல் போன்ற நிகழ்வுகள் மூலமாக தொகுக்கப்பட்ட சஞ்சிகை ஒன்றினை மாவட்ட ரீதியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பலாமரக்கன்றுகளையும், அவற்றை பராமரித்தலை மேற்பார்வை செய்யும் ஏடுகளையும் பிரதேச செயலகங்கள் வாரியாக கையளிக்கும் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.குகதாசன், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிறுவர் கழக உறுப்பனர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.