மட்டக்களப்பு மாவட்டத்தில் 200ஐ கடந்த கொரனா மரணங்கள் -நாளொன்றுக்கு ஐந்து பேர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 209கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 08மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா மரணங்கள் 201ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 300கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் 05மரணங்களும் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 2400கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டபோதிலும் கடந்த வாரத்தில் மட்டும் 2093கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 32பேர் மரணமடைந்துள்ளதாகவும் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் 30வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 275000தடுப்பூசிகள் பெறப்பட்டதாகவும் அதில் 2690100தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் 30வயதுக்கு மேற்பட்ட 92வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் இரண்டாவது தடுப்பூசி 67622பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 30வயதுக்கு மேற்பட்ட 23வீதமானவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் ; டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி அதிகளவில் நடமாடிவருவதாகவும் இது மாவட்டத்தினை இன்னும் பாதக நிலைக்கு கொண்டுசெல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.