களுவாஞ்சிகுடியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட அத்தியட்சகர் –தாதிகள் ஆர்ப்பாட்டம்(VIDEO)


கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயளர்களை அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வதிலிருந்து தாதியர்கள் விலகியுள்ள நிலையில் இன்றைய தினம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதேநேரம் களுவாஞ்சிகுடி வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தாதியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இன்று முன்னெடுத்தனர்.

கொவிட் தாக்கம் அதிகரித்துவருவதன் காரணமாக வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் மற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள்,ஊழியர்களை பாதுகாப்பதற்கும் அங்குள்ள நோயாளர்களை பாதுகாப்பதற்குமாக வைத்தியசாலைக்கு வருவோருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் தாதியர் சங்கத்தினால் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பதில்லையென்ற தீர்மானத்திற்கு அமைய களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும் தாதியர்கள் அன்டிஜன் சோதனை நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதன் காரணமாக வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் மற்றும் நோயாளர்களுக்கு ஆபத்தான நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இன்றைய தினம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.புவனேந்திரன்,அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன் ஏனைய வைத்தியர்களும் இந்த சேவையில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தினார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் தாதியர்கள் ஈடுபட்டனர்.வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட விடுமுறைகள்,விசேட விடுமுறைகளை வழங்காமல் வைத்திய அத்தியட்சகர் செயற்படுவதாகவும் தாதியர்களின் சலுகைகளை வழங்கமறுப்பதாகவும் தாதியர்கள் தெரிவிக்கின்றனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 150க்கும் அதிகமான தாதியர்கள் தேவைப்பாடுவுள்ள நிலையில் சுமார் 60வரையான தாதியர்களே கடமையாற்றுவதாகவும் ஒவ்வொரு பகுதிகளிலும் குறைந்தளவிலேயே தாதியர்கள் கடமையாற்றும் நிலையில் அவர்களின் கடமை நேரத்தினை குறைக்கும் செயற்பாட்டினையும் அத்தியட்சகர் முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.