மட்டக்களப்பினை தொடரும் ஆபத்து -24மணி நேரத்தில் 176தொற்றாளர்கள்(video)


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 176கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 03மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

இந்த வாரத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு தினங்களாக அதிகளவில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றுகூடுதலே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று(18)காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 176கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 03மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.ஏறாவூர் சுகாதார பிரிவில் 48பேரும்,காத்தான்குடியில் 36பேரும்,களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 26பேரும் ஓட்டமாவடியில் 23பேரும்,மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 22பேரும்,கோறளைப்பற்று மத்தியில் 06பேரும்,பட்டிப்பளை சுகாதார பிரிவில் 05பேரும் ஆரையம்பதி சுகாதார பிரிவில் 04பேரும்,போரதீவுப்பற்று,வாழைச்சேனை சுகாதார பிரிவுகளில் தலா ஒருவரும்,இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும்,இருவர் சிறைச்சாலையிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த மூவரில் கோறளைப்பற்று மத்தியை சேர்ந்த ஒருவரும் காத்தான்குடியை சேர்ந்த ஒருவரும் ஏறாவூரை சேர்ந்த ஒருவருமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 4496 பேர் கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 67மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் மூன்றாவது அலையில் 3513பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 58பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 07தினங்களில் 672கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் முதல் ஐந்து தினங்கள் குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த இரண்டு தினங்களில் அவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் பெரியகல்லாறு பகுதியில் 43கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் பெரியகல்லாறு 03ஆம் வட்டாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மரண வீட்டுக்கு சென்றுவந்தவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொவிட் தடுப்பூசிகள் 25ஆயிரம் கிடைக்கப்பெற்றன.இதுவரையில் 22739தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.இன்றும் நாளையும் வழங்கப்பட்டு அனைத்து தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுவிடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்றுகூடல் காரணமாகவே திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.மரண வீட்டுடன் தொடர்புடையவர்களினால்தான் இந்த திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் இவ்வாறான தொற்றுக்களை தவிர்ப்பதற்கு ஒன்றுகூடல்களை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.