களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை அதிகாரிகள் முறையாக அமுல்படுத்தினால் மக்கள் மத்தியில் காணப்படும் பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,பொதுஜன பெரமுன அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான பா.சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் முடிவுறுத்தப்படாத வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் கிராமிய ரீதியில் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் களுதாவளை போன்ற விவசாய கிராமங்களில் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

நன்னீர் மற்றும் கடல் மீன்பிடி நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் சில பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான உத்தரவுகளும் வழங்கிவைக்கப்பட்டன.