பிள்ளையாரடியில் உள்ள இயற்கை பறவைகள் சரணாலயத்தில் தீ


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இயற்கை பறவைகள் சரணாலயம் பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபையின் நுழைவாயிலில் பிள்ளையாரடி-கொக்குவில் பகுதியில் உள்ள இயற்கை பறவைகள் சரணாலயம் பகுதியிலேயே இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியானது நீண்ட நிலப்பரப்பினைக்கொண்டதுடன் சதுப்பு நிலங்களையும் கொண்ட பகுதியாகவும் உலகின் பல பாகங்களிலும் இருந்து ஒவ்வொரு காலநிலைக்கும் இங்கு பலவிதமான பறவைகள் வந்துசெல்கின்றன.

அண்மைக்காலமாக இப்பகுதியினை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசினால் இப்பகுதி பறவைகள் சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் அதனையும் மீறி அப்பகுதியில் அத்தமீறிய செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த தீவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ காரணமாக சுமார் நான்கு ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிந்துள்ளதுடன் தொடர்ந்தும் பரவும் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த தீபரவலின்போது அங்கிருந்த பறவைகள் வேறு பகுதிகளை நோக்கி செல்லும் நிலையினையும் காணமுடிந்ததுடன் குறித்த பகுதியில் இருந்த உயிரினங்கள் நீர்நிலைகளை நோக்கிசெல்வதையும் காணமுடிந்தது.

தொடர்ந்தும் தீயினைக்கட்டுப்படும் வகையிலான செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் முன்னெடுத்துவருகின்றனர்.