சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு


சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலமும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் தலைவர் பூ.கஜதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார். 

இதன்போது மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சைகைமொழியின் உரிமைகள் அனைவருக்கும் என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் செவிப்புலனற்றோரின் சமவாய்ப்புக்காக பயணிப்போம்,தேசிய சைகைமொழிக்கான அங்கீகாரம் வழங்கங்கள்,நாங்கள் மனித உரிமையினை சைகையில் அடையாளப்படுத்துவோம்,சைகைமொழிக்கு சமவாய்ப்பு அளியுங்கள் வழங்குகங்கள் என பல்வேறு சுலோகங்கள் பதாகைகள் ஏந்தியவாறு இந்த பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணியானது வை.எம்.சி.ஏ. மண்டபத்தினை சென்றடைந்ததும் அங்கு சர்வதேச சைகை மொழி தின நிகழ்வுகள் நடைபெற்றன.இதன்போது தற்போது உலகினையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொவிட் 19 நிலைமைகளை வெளிப்படுத்தும் வகையில் செவிப்புலனற்றோரினால் வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அத்துடன் சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.