போரதீவுப்பற்றில் யானையின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தையில் இன்று யானை தாக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சின்னவத்தையில் உள்ள வயலுக்கு சென்றபோது வெல்லாவெளி 35ஆம் கிராமத்தை சேர்ந்த சாமித்தம்பி நாராயணம்(62வயது)என்பவரே யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக வெல்லாnளி பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சிறுபோக வேளான்மை செய்கை நடைபெற்றுவரும் நிலையில் வயல் வேலைக்கு சென்றபோது வயலுக்கு அருகில் உள்ள காட்டில் இருந்த யானை குறித்த நபரை தாக்கியுள்ளது.

இதன்போது அங்கு வயல் வேலையில் நின்றவர்களினால் குறித்த நபர் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.