மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தினால் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரணப்பொதிகளை ஆலய நிர்வாகம் மற்றும் திருப்பணிச்சபையினர் இணைந்து போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியிடம் கையளித்தனர்.
ஆலயத்தின் தலைவர் இ.கந்தசாமி தலைமையில் ஆலய அறங்காவலர் சபை மற்றும் திருப்பணிச்சபையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
உலகையே விழிபிதுங்கச் செய்துள்ள கோரோனா வைரஸ்சினால் உலகமே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இக்கொள்ளை நோய்ப்பரவலை தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் இலங்கை அரசு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக பல அன்றாட தினக்கூலி செய்யும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அரசு, அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல இன்று மக்களுக்காக களத்தில் இறங்கி வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஓரளவு நிவாரணங்களை நாடுபூராகவும் வழங்கி வருகின்றனர்.





