வெல்லாவெளி,பட்டிப்பளை பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை –பலர் கைது-பெருமளவில் கோடாவும் கைப்பற்றல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத உடலுக்கு கேடுவிளைவிக்கும் மதுபானம் தயாரிக்கும் தொழில் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம பரிசோதகர் என்.நிரஞ்சன் தெரிவித்தார்.

பட்டிப்பளை மற்றும் போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மதுவரித்திணைக்களக அதிகாரிகளினால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து உபகரணங்களுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களகத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான 39ம் கொலனி கிராம சேவகரின் உதவியுடன் பரிசோதகரின் தலைமையில், கே.தர்மசீலன் உதவி மதுவரி திணைக்களக ஆணையாளர்  கிழக்கு மாகாணம் மற்றும் எச்.என்.டி.ஜெயவர்த்தன மதுவரி திணைக்களக அத்தியட்சகர் மட்டக்களப்பு ஆகியோரின் நெரிப்படுத்தலின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சில்லிக்கொடி ஆறு மற்றும் வாழைக்காலை 39ம் கொலனி ஆகிய பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது, 17பரல்களில் அடைக்கப்பட்ட 1250 லீற்றர் கோடா, 150லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்புத் தயாரிக்கும் உபகரங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் கசிப்புடன், 2பேர் கசிப்பு வடித்தமை மற்றும் மற்றொருவர் கோடாவுடன் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பிரதம பரிசோதகர் நிரஞ்சன் தெரிவித்தார்.

மதுவரித்திணைக்களக பரிசோதகர் என். சிறிகாந்தா மற்றும் கலால் உத்தியோகத்தர்களான ஜனானந்தா, சேவையர், அனுஷாந், சிவகாந்தா, ரஜனிகாந் ஆகியோர் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.