மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சித்திரைபுத்தாண்டு சிறப்பு பூஜை

தமிழ் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் பக்தர்களின் பிரசன்னமின்றி அமைதியான முறையில் வழிபாடுகள் நடைபெற்றன.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியான பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் இன்று வீடுகளில் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடினர்.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் விசேட கிரியைகள் நடைபெற்று மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மூலமூர்த்திக்கு விசேட அலங்கார தீப பூஜைகள் நடைபெற்றது.பூஜையினை தொடர்ந்து ஆலய பிரதமகுருவினால் கைவிசேடம் வழங்கப்பட்டது.

இதன்போது கொரனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டினையும் நாட்டு மக்களையும் மீட்கவேண்டியும் கொரணா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் தொற்றாளர்களை கவனிக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டுவருவவோருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும் இங்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்றைய சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூஜையில் ஆலய பரிபாலனசபையினரை தவிர வேறு யாரும் கலந்துகொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.