மாணவர்கள் பலர் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தினால் இம்மாதம் 13ஆம் திகதி பாடசாலைகளில் சிரமதானங்களை நடாத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் மாதாந்த டெங்கு ஒழிப்பு முன்னேற்றக் கூட்டமானது இன்று (06.03.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் என அடையாளப்படுத்தப்படும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பிரதேசங்களில் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும், இதனால் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக ஜனவரி மாதத்தில் சராசரியாக வாரத்திற்கு 70 தொடக்கம் 80 ஆக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை பெப்ரவரியில் 40 ஆக குறைந்து தற்போது மார்ச் மாதம் முதல் வாரத்தில் 20 ஆக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சட்டவிரோதமாகக் வீதியோரங்களில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பதற்காக மேலதிக கண்ணகாணிப்புக் கமெறாக்களை(CCtv) பொருத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் நிர்வாகத் தரப்பினரைக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள் பலர் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தினால் மாநகர நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்துப் பாடசாலைகளிலும் இம்மாதம் 13ஆம் திகதி டெங்கு ஒழிப்பு சிரமதானங்களை நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேற்படிக் கூட்டத்தில் மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுத்தலைவர் சிவம் பாக்கியநாதான், மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் லவக்குமார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வைத்தனர்.