உள்ளுராட்சி சபைகளின் நிதியின் மூலமும் மக்களுக்கு நிவாரணம் வழங்க கிழக்கு ஆளுநர் அனுமதி… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - ஞா.ஸ்ரீநேசன்)

(துதிமோகன்)
உள்ளுராட்சி சபைகளுக்கான நிதியின் மூலமும் மக்களுக்கு உதவக் கூடிய வகையில் திட்டமிடலை மேற்கொள்வதற்கு ஆளுநரிடம் இருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியமைக்கமைவாக ஆளுநரால் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.


ஊரடங்கு நிலைமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோணா தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் தற்போது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கொரோணா தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாக்கின்ற செயற்பாட்டினை நாங்கள் வரவேற்கின்றோம். மனிதனை வாட்டி வதைக்கின்ற ஒரு கெடிய நோயாக இருப்பதன் காரணமாக மருத்துவ ஆலோசனைகளின் பிரகாரம் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் செயற்பாடுகளை நாங்களும் மதிக்கின்றோம்.

அதே நேரத்தில் அன்றாடம் தொழில் புரிந்து வருமானம் ஈட்டுபவர்கள், முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உழைப்புகள் இல்லாமல் வீடுகளில் வாடிக் கொண்டிருக்கின்ற போது அவர்களுக்குப் பதிலீடாக உரிய அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பொறுப்பு அரசிற்கு இருக்கின்றது. துரிதமாக அவர்களுக்கு பொருட்களை வழங்குகின்ற போது ஊரடங்கு நிலைமையின் போதும் அவர்களை நன்கு வாழ வைத்ததாக அமையும்.

ஊரடங்கு உத்தரவினை வரவேற்கின்றோம். வீடடங்கிக் கிடக்கின்ற மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசு துரித கதியில் செயற்பட வேண்டும்.

மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்திட்டம் தொடர்பாக எமது தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் பேசியிருக்கின்றார். எமது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் பிரதமருடன் பேசியிருந்தார். நானும் ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியிருந்தேன். இதற்கான பரிகாரம் கட்டாயமாகக் கிடைக்க வேண்டும்.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருப்பின் எங்களால் இயலுமானவரை உதவியினைச் செய்ய முடியும். ஆனால் இது மாவட்டம் பூராகவுமான செயற்பாடாக இருப்பதால் இதற்கான நிவாரணத்தினை எமது சக்திக்குள் மேற்கொள்வது கடினமாகையால் அரசு இதனை வழங்குவதற்குத துரிதமாகச் செயற்பட வேண்டும்.

நிவாரண விடயம் தொடர்பில் உள்ளுராட்சி சபைகளுக்கான நிதியின் மூலமும் மக்களுக்கு உதவக் கூடிய வகையில் திட்டமிடலை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைகளைக் கூட்டி அதில் விசேட தீர்மானங்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அறிவிக்கும் பட்சத்தில் உள்ளுராட்சி நிதியில் குறிப்பிட்டளவு வீதத்தனை வாழ்வாதாரமற்று இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிற்குப் பயன்படுத்தவதற்கு முடியும். இதற்கு ஆளுநரிடமிருந்து சாதகமான பச்சைக் கொடி காட்டப்பட்டிருக்கின்றது. எனவே உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் இந்த செயற்பாடுகளில் உடனடியாகச் ஈடுபட வேண்டும்.

பொதுமக்களும் ஊரடங்கு உத்திரவினை கவனத்தில் எடுத்து வீடுகளில் தனிமையாக இருக்க வேண்டும். தனிமைப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானது ஏனெனில் இந்த நோயின் தாக்கம் அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நோய்க்குரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நாங்கள் நோய்த்தெற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதுதான் மிக முக்கியமாக இருக்கும். அரசின் ஊரடங்கு உத்தரவினை மதித்து வீதிகளில் தேவையற்ற நடமாட்டங்களைக் குறைத்து வீடுகளில் இருக்க வேண்டும் என்பதை மக்களிடம் நாங்கள் உருக்கமாக வேண்டுகின்றோம் என்று தெரிவித்தார்.