மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடந்த மந்திர கல்ப மஹா யாகம் -நிகழ்ந்த அற்புதங்கள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவந்த மந்திர கல்ப மஹா யாகம் நேற்று காலை முடிவுக்கு வந்தது.

8000 வருடங்களுக்கு முன்னர் அகஸ்த்திய மாமுனிவரினால் உலக நன்மைக்காக நடாத்தப்பட்ட சிவனுக்குரிய யாகமாக மந்திர கல்ப மஹா யாகம் குறிப்பிடப்பட்டுவருகின்றது.

கடந்த திங்கட்கிழமை முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த மகா யாகம் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவந்தது.

நேற்று சிவராத்திரி தினத்தில் குறித்த மஹா யாகத்தின் பூர்த்தி சிறப்பாக நடைபெற்றது.சிவனுக்காக மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரமாண்டமான முறையில் நடாத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

நேற்று அதிகாலை விசேட பூஜைகள் நடைபெற்று மூலமூர்த்தியாகிய மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மஹா யாககுண்டத்தில் மந்திர கல்ப மஹா யாகம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இந்த யாகத்தினை நடாத்தினர்.

நூற்றுக்கணக்கான அற்புத மூலிகைகள் கொண்டு சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த மந்திர கல்ப மஹா யாகத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த யாகத்தின் இறுதி நாள் நிகழ்வின்போது யாகத்தின் அற்புதத்தினை பறைசாற்றும் வகையில் வர்ணபகவான் தனது அருள் மழையினை பொழிந்து யாகத்திற்கு ஆசிவழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.