மாங்காடு கிராமத்தில் தனித்துவமாய் அமைந்த பொங்கல் விழா



மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தில், மாங்காடு இந்துமாமன்றம், கலைமகள் அறநெறிப் பாடசாலை மற்றும் மாங்காடு சமூக அமைப்புக்கள் இணைந்து பொதுமக்கள் ஆதரவுடன் நடாத்திய பொங்கற் பெருவிழா 24.01.2020ம் திகதி மாங்காடு கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இந்துமாமன்ற தலைவர் ஸ்ரீ செ. நாராண இராமானுஜதாசன் தலைமையில் இடம்பெற்றது


இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக மண்முனைத் தென் எருவில் பற்றுப் பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரட்ணம் அவர்களும் விசேட அதிதிகளாக மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர்  சா.ஆனந்தமோகன் மற்றும் மட்/ மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் த. குணசேகரம் அவர்களும், கௌரவ அதிதிகளாக மாங்காடு கிராமத்தின் கிராம சேவையாளர்  த. ஜனேந்திரன், மாங்காடு சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் வ. வேலாயுதம், கலைமகள் அறநெறிப் பாடசாலை அதிபர் தெ. டினேஸ்வரன் மற்றும் மாங்காடு கிராமத்தின் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும், அறநெறிப் பாடசாலை மாணவர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

இப்பொங்கற் பெருவிழாவானது மாங்காடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மங்கலகரமாக எடுத்து வரப்பட்ட பொங்கல் பொருட்களைக்  கொண்டு பொங்கல் விழா ஆரம்பமானது.

அதனைத்தொடர்ந்து பொங்கல் பானை வைத்தல், மங்கல விளக்கேற்றல், கிராமிய நடனங்கள், கிராமியப் பாடல்கள் இசைத்தல், கதா பிரசங்கங்கள், சமய சொற்பொழிவுகள், கோலம் போடுதல் உள்ளிட்ட போட்டிகள் முதலான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரட்ணம் அவர்கள் தமது உரையில் களுவாஞ்சிகுடிப் பிரதேச செயலகப் பிரிவில் மாங்காடு கிராமம் முதன் முதலாக தன்னிச்சையாக இந்த தைப்பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியிருக்கின்றமை மிகவும் சந்தோசமாக இருக்கின்றதெனவும், நமது தமிழ் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மருவிச் செல்கின்ற இத்தருணத்தில் அவைகளுக்கு புத்துணர்வூட்டும் செயற்பாடுகளை கிராமியச் சிறார்களைக் கொண்டு நடாத்தியிருக்கின்றமையும் அவை அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சியடையும் என்பதில் இந்நிகழ்வு அடையாளம் என குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது .