சிறந்த ஒழுக்கசீலர்களாக மாணவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும்





முன்பள்ளி மாணவர்களை  சமூகத்திற்கு சிறந்த நற்பிரஜைகளாக தர வேண்டிய பொறுப்பு முன்பள்ளி ஆசிரியர்களையே சாரும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மண்முனை தென்எருவில் பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு முன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்பிள்ளைகள் முதலாவது கற்றலுக்காக முன்பள்ளியில் சேரும் போது அவர்களுக்கு சிறந்த வழிகாட்டுவது ஆசிரியர்கள் தான். அவர்களுக்கான நற்பழக்க வழக்கங்கள், நல்ல இலட்சிய பாதை போன்றவற்றை அவர்களுக்கு புரிகின்ற மாதிரி அதனை ஊட்டுவதே ஆசிரியர்களின் திறமையாகும்.

இன்று பல பிள்ளைகள் சிறுவயதிலே பாதை மாறி குழந்தை தொழிலாளியாகவும், தீயபழக்க வழக்கங்களுக்கு மாறிச் செல்வதை நாம் காணலாம்.

அதுமட்டுமன்றி இன்னும் பல மாணவர்கள் சிறுவயதிலே போதைக்கு அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். ஆகவே இப்பிள்ளைகளை சமூகத்திற்கு நற்பிரஜைகளாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு முன்பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், கிராம பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.