மட்டக்களப்பு கல்லடி,உப்போடை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் மஹா கும்பாபிசேகம் -வானில் நடந்த அதிசயம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி,உப்போடை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்டபக்ஸ பிரதிஸ்டா மஹா கும்பாபிசேகம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகவும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் காணப்படும் இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

பரிவார மூர்த்திகள்,இராஜகோபுரம் உட்பட பல்வேறு பல்வேறு சித்திரவேலைப்பாடுகளுடன் ஆலயம் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் N;நற்று புதன்கிழமை ஆலயத்தின் அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இன்று காலை ஆத்மபூஜை,துவஜபூஜை,யாகபூஜை பூர்ணாகுத உபசார ஹோமம்,மஹாபூர்ணாகுதி நடைபெற்று நவகுண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற்றதுடன் பிரதான கும்பம் உட்பட கும்பங்களுக்கு விசேட பூஜைகளும் அந்தனர்களினால் நடாத்தப்பட்டது.

இதன்போது சர்வமங்கல கோஷத்துடன் பக்தர்கள் புடைசூழ கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வேத நாத கோசங்களுடன் பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் கும்பங்கள் கொண்டுசெல்லப்பட்டு இராஜகோபுரம்,மணிக்கோபுரங்கள்,பிரதான மூலஸ்தான்,பரிவார ஆலயங்களின் மூலஸ்தானங்கள் மஹா கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதான கும்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்கு மத்தியில் மூலமூர்த்தியாகிய சித்திவிநாயகருக்கு கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.இன்றைய கும்பாபிசேக நிகழ்வின்போது ஆலயத்திற்கு மேலாக 20க்கும் மேற்பட்ட கருடன்கள் ஆலயத்தினை வலம்வந்த சம்பவம் அதிசயமாக பக்தர்களினால் காணப்பட்டது.

மஹா கும்பாபிசேகத்தினை கண்டுகழிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.