வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் 200வது ஆண்டினை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் 200வது ஆண்டினை வரவேற்கும் வகையிலும் 2020ஆண்டினை வரவேற்கும் வகையிலான நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

1820ஆம் ஆண்டு மெதடிஸ்த மிசனரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை காலங்களை கடந்து மட்டக்களப்பின் சாதனைக்களமாக மாறியிருக்கின்றது.

பல பெருமைகளைக்கொண்ட மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை இந்த ஆண்டு 200வது ஆண்டில் காலடித்தடத்தினை பதிக்கின்றது.

இதனை சிறப்பிக்கும் வகையிலும் புதிய 2020ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலும் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டதுடன் பட்டாசுகளை கொழுத்தி மாணவர்கள் தமது மகிழ்ச்சி ஆரவாரத்தினை நடாத்தி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர்.

இந்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முன்னாள் கல்வி பணிப்பாளரும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான திருமதி சுபா சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையின் 200ஆவது ஆண்டினை வரவேற்கும் வகையிலான நினைவுச்சின்னமும் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.