மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையின் மாணவிகள் தமது ஆசிரியர்களுடன் அன்மையில் மாநகர சபைக்கு சுற்றுலா விஜயமொன்றினை மேற்கொண்டு மாநகர முதல்வருடன் தமது தேவைகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
அக்கலந்துரையாடலின் போது திருமகள் மேற்கு வீதியானது பல காலமாக புனரமைக்கப்படாமையினால் பொதுமக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சிரமப்படுவதாகவும், குறிப்பாக பாடசாலை மாணவர்களாகிய தாம் மழைக் காலங்களில் சேறும் சகதியும் நிறைந்த இவ்வீதியால் செல்லும் போது பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியதுடன், இவ்வீதியினை பருவ மழைக்காலம் நெருங்குவதற்கு முன் அபிவிருத்தி செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மாணவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்ற மாநகர முதல்வர் குறித்த வட்டார உறுப்பினர் மா.ஸ்ரீஸ்கந்தரா உள்ளிட்ட மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து கள விஜயத்தினை மேற்கொண்டு உடனடியாக வேலைகளை ஆரம்பிக்குமாறும் பணித்திருந்தார்.
இதன்படி 2 மில்லியன் ரூபாய் சபை நிதியில் கிட்டத்தட்ட 268 மீற்றர் நீளத்தில் மேற்படி வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.