சிறுவர் தினத்தினை முன்னிட்டு புதுநகர் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகள்

(திலக்ஷி)

உலகளாவிய ரீதியில் அக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர்கள் தினத்தோடு முதியோர் தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபை 1989ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி சிறுவர் தினம் என பிரகடனப்படுத்தி அன்றிலிருந்து சிறுவர் தினம் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் அந்த வகையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் “சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு வழியமைத்துக் கொடுப்போம்” எனும் தொணிப் பொருளில் புதுநகர் பாலர் பாடசாலையில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் சிறுவர்களை மகிழ்விக்கக் கூடிய வகையிலான மிட்டாய் பொறுக்குதல், சங்கிலி கதிரை, வினோத உடை போட்டி மற்றும் குறுந்தூர ஓட்டப் போட்டிகள் என்பன இடம்பெற்றதுடன் அதில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் மாணவர்களின் உடற்பயிற்சி நடனமானது பார்வையாளர்களின் பாராட்டினையும் பெற்றிருந்தமை குறிப்படத்தக்கதாகும்.

மேற்படி நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் உறுப்பினர்களான வே.தவராஜா, த.சிவானந்தராஜா, மா.சண்முகலிங்கம், திருமதி.பற்றிமா பல்தசார், திருமதி குஜாஜினி பாலாகிருஸ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டதோடு மாணவர்களை வாழ்த்தி, பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.