கிழக்கிற்கான கூட்டின் செல் நெறி
.............................. ...........................
எப்படியாயினும் கிழக்கில் தமிழ் முதலமைச்சரை பெறல் என்ற கோசத்துடன் ஒரு கூட்டு முன்னனியை உருவாக்க ஒரு குழு வெளிக்கிட்டு இன்று பல குழுக்களாக காணப்படுகின்றனர் .மாகாண சபை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்ததே இதற்கு காரணமாகும், பின் சனாதிபதித் தேர்தல் அலை வீச அதற்கான கூட்டிற்கு தயாராக ஓட ஆயத்தமாக மீண்டும் எந்த தேர்தல் என்பதில் குழப்ப நிலை.கொழும்பை மையங்கொண்டு இந்நிலை நீடித்தாலும், கிழக்கில் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கின்றோம்.
கிழக்கில் ஒரு கூட்டு முன்னனி கட்டமைக்கப் படுவதற்கு முன்பாகவே இன்னும்பல அரசியல் கட்சிகள் இறக்குமதி செய்யப்பட்டு கடை விரிக்கத் தொடங்கி விட்டன.கிழக்கு மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொள்ளாத தங்களுடைய வாக்குப்பலம் என்னவென்று தங்களுக்கே தெரியாத இவர்களெல்லாம் கிழக்கிற்கு தலைமை தாங்க வெளிக்கிட்டால் இப்போதே நடுத்தெருவில் நிற்கும் இம்மக்கள் இனிமேலும் எங்கே போவார்கள்.
கிழக்கில் பொதுவான ஒரு கூட்டிற்கு ஒரு வீதம் கூட வாய்ப்பில்லை,ஆகக் குறைந்தது இரண்டு கூட்டுக்களையாவது உருவாக்கி போட்டித்தன்மையினூடாக மக்கள் நலனை போட்டி போட்டுக்கொண்டு முன் நிறுத்த வேண்டும்.கீரைக்கடைக்கு எதிர்க்கடை என்றதன்மையுடன்,ஆனால் போகின்ற போக்கு யாருடனும் ஒத்தோடாதவர்களெல்லாம் சாத்தியமற்ற கோசங்களைக் கொண்டு கிழக்கில் யதார்தங்களை புரிந்து கொள்லாமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வெளிக்கிட்டு இருக்கின்றனர்.கஜேந்திர குமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் இதனைபுரிந்து கொள்ளவேண்டும். வடக்கே உங்களை இன்னமும் அங்கீகரிக்காத போது கிழக்கில் இது எப்படி சாத்தியமாகும்.
கூட்டு என்று வெளிக்கிட்டவர்களுக்குப் பின்னால் ஒவ்வொரு நிகழ்சிநிரல் உள்ளது,கிழக்குத் தமிழர் ஒன்றியம்,ஈழத்தமிழர் பேரவை போன்றவைகளும் இத்தகையதே. தற்போதைய கூட்டு தேர்தலை மையங்கொண்டதே எனவே ,பலமான வாக்கு வங்கியைக் கொண்டவர்கள் வாய் திறக்க வேண்டும் .இனிமேலும் கள்ள மௌனம் சாதிப்பது ஆகாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய் திறப்பதாக இல்லை,ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரை வாடி இருக்குமாம் கொக்கு என்பது போல ,எதையோ எண்ணிக்கொண்டு மௌனம் காக்கிறது,அல்லது எப்படியும் மீண்டும் மீண்டும் எமக்கே கிழக்கு மக்கள் வாக்களிப்பர் என்ற மெத்தனப் போக்காக இருக்கலாம்.
அடுத்து,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றுமொரு வாக்கு வங்கியைக் கொண்டவர்கள்.அவர்கள் கூட்டு என்பவர்கள் எல்லோருக்கும் பின்னாலும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.அதனை விடுத்து தாங்கள் ஒரு கூட்டை உருவாக்குவதே பொருத்தமானது.அப்போதுதான் பலமான ஒரு கூட்டு முன்னணி உருவாகும்,சில்லறையாய் சிதறும் வாக்குகளை சேகரிக்கவும் ,ஒருமித்த குரலாய் மக்களின் கோரிக்கையை முன்வைத்து பேரம்பேசி வென்றிடவும் உதவும்.எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்திட வேண்டும்.இல்லாதவிடத்து இவர்கள் தலைமையில் இரு தமிழ் கூட்டு முன்னணிகள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த இரு கூட்டுக்குள் ஏதோவொரு வகையில் இணைந்து செயற்பட முடியாமல் வாக்குகளைப் பிரிக்க முற்படும் கட்சிகளும் அமைப்புக்களும் மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட்டு அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டும்.கிழக்கின் யதார்த்தத்தை புரியாதவர்களுக்கு இங்கென்ன வேலை?.
வ.ச.முரளீசேகரன்.

