யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது.
பிரித்தானியாவில் இருந்து யாழ்குடாவுக்கு வந்தவர்கள் மட்டக்களப்புக்கும் சுற்றுலா ஒன்றிணை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நேற்று உல்லைப்பிரதேசத்திற்கு சுற்றுலாசென்று திரும்பியுள்ளனர்.
இவர்கள் சுற்றுலா சென்று திரும்பியவர்கள் காத்தான்குடி பகுதியில் கடைகளில் பொருட்கள் கொள்வனவுசெய்துகொண்டிருந்தபோது வெளிநாட்டில் இருந்துவந்த பெண்களின் ஆடை தொடர்பில் சிலர் அங்கு கருத்துகள் கூறிய நிலையில் சுற்றுலாசென்று வந்தவர்கள் அவர்களுடன் முரண்பட்டபின் மட்டக்களப்புக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 119 ஊடாக குறித்த வானின் இலக்கம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு குறித்த வானில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை குறித்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வானிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் எந்தவித சந்தேகப்படும்படியான பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் திரும்சசென்றனர்.
அவர்கள் வந்த வான் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு சோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டது.