மகளை மீட்டுத்தாருங்கள் -பதறிய தாய் - மட்டக்களப்பு பார் வீதியில் பதற்றம் - முடிவுக்கு கொண்டுவந்த பொலிஸார்

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபை பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று மாலை பார் விதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில் தனது மகளை தன்னை பார்க்கவிடால் ஐந்து வருடமாக உள்ளே வைத்துள்ளதாக கோரியும் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரியும் தாய் ஒருவர் குறித்த சபைக்கு முன்பாக போராட்டம் நடாத்தினார்.

இதன்போது குறித்த தாயை குறித்த சபையின் பணியாளர்கள் உள்ளேவிட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு குறித்த தாய் போராட்டம் நடாத்தியுள்ளார்.

தனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும் தனது மகள் தொடர்பில் முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப்பட்டுவருவதாகவும் தனது மகளை மீட்கும் வரையில் போகமாட்டேன் என போராட்டம் நடாத்தியுள்ளார்.

இதன்போது அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த தாய்க்கு ஆதரவாக பேசியதுடன் குறித்த சபைக்குள் சென்று சபை நிர்வாகத்துடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த பெண்ணை அனுப்பமுடியாது என நிர்வாகம் தெரிவிக்க இளைஞர்கள் சபைக்குள் புகுந்து குறித்த பெண்ணை மீட்க முனைந்தபோது அங்குவந்த பொலிஸார் குறித்த இளைஞர்களை வெளியேற்றி நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன்போது குறித்த தாயின் கோரிக்கை தொடர்பிலும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த தாயையும் மகளையும் குறித்த சபையின் போதகரையும் பொலிஸார் விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

இதேநேரம் குறித்த கிறிஸ்தவ சபை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த தேவாலயம் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துகளும் வீடியோ பதிவுகளும் முகநூல் ஊடாக வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.