சில தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அச்சுறுத்தல் -ஆளுனர் ஹிஸ்புல்லா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட அசௌகரியங்கள், அநீதிகளைக் கருத்திற்கொண்டே, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றிவந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு, இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் இந்த இடமாற்றம் தற்காலிகமானது என்றும், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விளக்கமளித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றிவரும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், உயிர்த்த ஞாயிறு (21) தாக்குலுக்குப் பின்னர், சில தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஒரு சில தமிழ் பாடசாலைகளின் நிர்வாகிகள், முஸ்லிம் ஆசிரியைகளை பாடசாலைக்குள் அனுமதிக்கமுடியாது எனக் கூறியதாகவும் பாடசாலைகளின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், முஸ்லிம் ஆசிரியைகளை விரட்டி அடித்துமுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

“வெளிப்பிரதேசங்களில் கடமைபுரிகின்ற ஆசிரியர்கள் பலர், பாடசாலைக்கு அருகில் வாடகை வீடுகளில் இருந்தார்கள். அவர்களை வீடுகளை விட்டு வெளியேற்றியதாலும் அவர்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாலும் அவர்களைத் தற்காலிகமாக வெளியேறுமாறு பொலிஸார் கூறியமையாலும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டன” என்றார்.

“சில கல்வியலாளர்கள் பாடசாலைகளுடன் தொடர்பு கொண்டு பாடசாலைகளில் இவ்வாறு செயற்பட வேண்டாம் எனக் கூறிய போதிலும் நகரிலுள்ள சில பாடசாலைகள், இவ்வகையான செயல்கள் இடம்பெற்றன. நகரிலுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் ஆறுபேர், பாடசாலைக்கு சென்றபோது, அவர்கள் பாடசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது என்று அதிபர்கள் கூறியதால், பாதுகாப்பு கருதியே, அவர்களுக்கு 2 மாதங்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது” என்றார்.

“மாகாணக் கல்விப் பணிப்பாளர் விடுத்த வேண்டுகோளுக்கமைய ஆசிரியைகளை இடமாற்றுவதற்கான அனுமதியை வழங்கினேனே தவிர, எந்த ஓர் ஆசிரியரையும் நான் தன்னிச்சையாக இடமாற்றம் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், முஸ்லிம் ஆசிரியைகளை அபாய அணிந்துசெல்ல அனுமதிப்பதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்பட்சத்தில், ஆசிரியைகளில் இடமாற்றத்தை இரத்துசெய்து மீண்டும் அந்தந்த பாடசாலைகளுக்கு அவர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

எந்த ஓர் ஆண் ஆசிரியருக்கும் தான் இடமாற்றம் வழங்கவில்லை என்றும் இது தன் மீது சுமத்தப்பட்ட வீண் பழி என்றும் தெரிவித்தார்.
நன்றி –தமிழ்மிரர்