மட்டக்களப்பில் தீவிரவாத குண்டுவெடிப்பு -30க்கும் மேற்பட்டவர்கள் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்று காலை காத்தான்குடியின் 01ஆம் வாட்டாரம் உட்பட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர்.

குறித்த தற்கொலை தாக்குதல் தொடர்பிலும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு தேசிய தௌஹீத் ஜமாய்த்துடனான தொடர்புகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினர்,விசேட அதிரடிப்படையினர்,படைபுலனாய்வுத்துறையினர்,பொலிஸ் புலனாய்வுத்துறையினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதனடிப்படையில் காத்தான்குடி பகுதியில் இதுவரையில் 15க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை,மட்டக்களப்பு,வவுணதீவு,வாகரை உட்பட பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து பெருமளவான தகவல்கள் பெறப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.