வவுணதீவில் நீர் வழங்கல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் -எம்.பி.க்கள் வழங்கிய உறுதிமொழி

மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மக்கள் குடிநீர் வழங்குமாறு கோரி வவுணதீவில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.

வவுணதீவில் உள்ள தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் நீர்விநியோக பகுதியை வழிமறித்தே இந்த போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
உன்னிச்சைகுளத்தில் இருந்து குறித்த நீர்வழங்கல் நிலையத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

ஆனால் குறித்த நீர் விநியோக திட்டத்தின் ஊடாக உன்னிச்சை உட்பட அதனை அண்டிய பகுதிகளுக்கு நீர் கிடைப்பதில்லையெனவும் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இது தொடர்பிலான கோரிக்கைகளை தாங்கள் முன்வைத்துவருகின்ற நிலையிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த கால யுத்ததினால் கடுமையான பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமையினாலும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குளத்தில் குடிநீரைப்பெறுவதற்காக செல்லும்போது பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் சில நேரங்களில் யானைகள் அடித்து இறக்கும் நிலையேற்படுவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டதுடன் மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குடிநீர் தேவையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,நீர்வழங்கல் அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் பிரகாஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

குடிநீர் விநியோகத்திற்காக ஆறு கோடி ரூபாவுக்கு மேல் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் உள்ள பிரச்சிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தமக்கான கால அவகாசத்தினை வழங்குமாறும் அந்த காலப்பகுதிக்குள் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த பகுதியிலும் நீரைபெற்றுக்கொள்ளமுடியாத நிலையினை நாங்கள் ஏற்படுத்துவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமது பகுதிகளில் இருந்து ஓட்டமாவடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு நீர் வழங்கப்படும்போது தமது பகுதிக்கு அந்த குடிநீரை ஏன் வழங்கமுடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கேள்வியெழுப்பினர்.

எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் குறித்த பகுதி மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்;டது.