தமிழர்கள் வேறூபாடுகளை மறந்து ஒரு குடையின் கீழ் வரவேண்டும் -அமைச்சர் மனோகணேசன் அழைப்பு

தமிழர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒரு குடையின் கீழ் ஒன்றுபடவேண்டிய காலம் உருவாகியுள்ளதாகவும் அதற்கான வரலாறு அழைப்பதாகவும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு,இந்துசமய விவகார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

கடந்த மகிந்த ராஜபக்ஸவின் காட்டாட்சியில் பாதிpக்கப்பட்டு அதற்குள் இருந்து பல இன்னல்களைசந்தித்து அந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்ற நம்பிக்கையினை தந்து புதிய ஆட்சியை தந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் இருவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு பெருமளவான உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு,இந்துசமய விவகார அமைச்சராக மீண்டும் கடமையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசனுக்கு இன்று மாலை களுவாஞ்சிகுடியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி,பட்டிருப்பு பஸ் நிலையத்தின் முற்பாக அமைச்சருக்கு பெருமளவான மக்கள் கூடி வரவேற்பளித்தனர்.

இதன்போது ஆலயங்களின் அறங்காவலர்கள் மற்றும் பொது அமைப்புகளினால் அமைச்சர் கௌரவிக்கப்பட்டதை தொடர்ந்து சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் அமைச்சர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க.இவர்கள் இருவரையும் பதவியில் அமர்த்தியவர்கள் நாங்கள்தான்.அதனை யாரும் மறந்துவிடக்கூடாது.அவர்களுக்கு அது ஞாபகம் இல்லை.ஆனால் எங்களுக்கு ஞாபகம் இருக்கி;ன்றது.

2015ஆம் ஆண்டு வடகிழக்கு உட்பட அனைத்து பகுதியில் உள்ள தமிழர்களும் ஒன்றிணைந்து வழங்கிய வாக்கினால்தான் மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதியாகியிருக்கின்றார்.எங்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களும் முற்போக்கு சிந்தனைகொண்ட சிங்கள மக்களும் வாக்களித்தனர்.ஆனால் அணி திரண்டவர்கள் தமிழ் மக்கள்தான்.

வாக்களிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்காக மகிந்த ஆட்சிக்காலத்தில் கடும் துன்பங்களை அனுபவித்த நாங்கள்தான் அந்த காட்டாட்சிக்குள் இருந்துகொண்டுபோராடி,போராடித்தான் அந்த காட்டாட்சியை மாற்றமுடியும் என்ற நம்பிக்கையினை தந்து புதிய ஆட்சியை நாங்கள்தான் மலரச்செய்தோம்.

இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பல பிரச்சினைகள் இருக்கின்றது.என்னதான் சண்டையிருந்தாலும் இருவரும் இணைந்து நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு பெருந்தொகையான உத்தரவாதத்தினை தந்துள்ளதுள்ளனர்.அதனை அவர்கள் அடிக்கடி மறந்துபோகின்றனர்.அதனை அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.அவர்கள் இருவருக்கும் மறதி அதிகம்.

யார் ஆட்சியில் அமர்த்தினார்கள்,எதனால் அமர்த்தப்பட்டோம்,என்ன சொன்னோம் என்பதை இருவரும் மறந்துவருகின்றனர்.அவ்வாறு மறந்துவருபவர்களுக்கு தலையில் குட்டியாவது ஞாபகப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

தமிழர்கள் அனைவரும் தங்களுக்குள்ள பிரதேச வேறுபாடுகளை மறந்து தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றுபடவேண்டிய காலம் உருவாகியுள்ளது.வரலாறு எங்களை அழைக்கின்றது.இந்த ஒன்றுபடல் என்பது எவருக்கும் எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல.எந்தவொரு இனத்தின் உரிமையினையும் தட்டிப்பறிக்க முனையவில்லை.ஆனால் எங்களது உரிமைகளையும் எவரும் தட்டிப்பறிக்க அனுமதிக்கமுடியாது.

யுத்தம் காரணமாக வடகிழக்கு உட்பட அனைத்து பகுதி மக்களும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.அதிலும் ஏனைய இனங்களை விட அதிக கஸ்டங்களை எதிர்கொண்டவர்கள் தமிழர்களாகும்.இதனை சிலர் மூடிமறைக்க பார்க்கின்றனர்.தமிழர்கள் யுத்த காலத்தில் இழந்தவாழ்க்கையினை பெற்றுக்கொடுக்கவேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்றது.

தமிழர்களுக்கு இரண்டு விடயங்களை செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றது.அரசியல் தீர்வு,அபிவிருத்தி தீர்வு என்னும் இரண்டு விடயங்களை செய்யவேண்டியுள்ளது.