ஆசைகாட்டி மோசம் செய்தி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காமாட்சி கிராமத்தில் புதுவருடத்தினை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினை அதிதிகள் புறக்கணித்தமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமாட்சி கிராமத்தில் புதுவருடத்தினை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை காமாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

புதுவருடத்தினை சிறப்பிக்கும் வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பகுதியான இப்பகுதில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

காமாட்சிநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இரா.நடேசபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.நல்லதம்பி மட்டுமே அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரும் சிறப்பு இலங்கை தமிழரசுக்கட்சி பொதுச்செயலாhளர் கி.துரைராஜசிங்கம்,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி,பிரதேசசபை தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டு பிரமாண்டமாக நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

எனினும் இறுதிவரையில் கோட்டக்கல்வி அதிகாரி மட்டுமே கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்ததுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.

புதுவருட தினத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி மக்களை அதிதிகள் புறகணித்துள்ளதாக இங்கு உரையாற்றியவர்கள் கவலை தெரிவித்தனர்.