மட்டக்களப்பு மாநகரசபை 14வது அமர்வு –எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர்

மட்டக்களப்பு மாநகரசபையின் 14வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.இது இவ்வருடத்திற்கான முதலாவது அமர்வாகும்.

இவ் அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் உட்பட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது மாநகர முதல்வரின் முன்மொழிவுகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள் மற்றும் ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், பிரேரணைகள் எனப் பல்வேறு அம்சங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அத்துடன் மாநகர சபையின் புதிய ஆண்டுக்கான நிலையியற் குழுக்கள் தெரிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையியற் குழுக்கள் அவ்வாறே செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் பூபாளராஜா அவர்கள் புதிதாக அனைத்து நிலையியற் குழுக்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நிலையியற் குழுக்களைப் புதிதாக அமைப்பதா அல்லது இருக்கின்ற குழுக்கள் அவ்வாறே இயங்குவதா என்பதற்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் அமைக்கப்பட்ட நிலையியற் குழுக்கள் அவ்வாறே தொடர்ந்து இயங்குவதற்கு ஆதரவாக 30 வாக்குகளும், எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உட்பட 06 வாக்குகளும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னுமொரு உறுப்பினர் நடுநிலைமை வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஏற்கனவே உள்ள நிலையியற் குழுக்கள் அவ்வாறே தொடர்ந்து இயங்குவதென்ற தீர்மானம் 24 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் விசேட தேவையுடையோர் மற்றும் தாய்சேய் நலன், நுண்கடன் தொடர்பிலான விடயங்களுக்காக விசேடமாக புதிய குழுவொன்றும் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் 04 பெண் உறுப்பினர்கள் உட்பட ஆறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதன் போது மாநகர சபை உறுப்பினர் செல்வி மனோகரன் அவர்களை இக்குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கையில் இதற்கான வாக்கெடுப்பும் இடம்பெற்றது.

இதன் போது முதல்வர் நீங்கலாக செல்வி மனோகரன் அவர்களை இக்குழுவில் இணைப்பதற்கு எதிராக 22 உறுப்பினர்களும், இணைக்கப்பட வேண்டும் என 10 உறுப்பினர்களும், நடுநிலையாக 04 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இவ்வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அமர்வின் இறுதியில் அண்மையில் இறைபதம் எய்திய அமரர் பிறின்ஸ் காசிநாதர் மற்றும் அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர் ஆகியோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.