வவுணதீவில் நடைபெற்றதுபோல் நடக்கும்’-பொலிஸாரை மிரட்டிய போதையர்கள் -கடுப்பாகிய பொலிஸார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது அந்த முச்சக்கர வண்டியை செலுத்தி வந்தவர் உட்பட அதில் பயணித்த நான்கு பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

அவர்களை பொலிஸார் கைதுசெய்ய முயன்றபோது அந்த முச்சக்கர வண்டியில் இருந்த மூவர் “வவுணதீவில் நடந்த சம்பவத்தினை நினைவில் கொள்ளுங்கள்,எங்களை கைதுசெய்தால் அதே நிலமை உங்களுக்கு ஏற்படும்”என பொலிஸாரை மிரட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை,பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மூவரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மகிழுர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அதில் ஒருவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினரின் சகோதரர் எனவும் தெரியவருகின்றது.