ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்திரா தீர்த்தோற்சவம்

மார்கழி மாதத்தில் இந்துக்களால் சிவனை நினைத்து திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

திருவெண்பாவை விரதத்தின் இறுதிநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆருத்திரா தீர்த்தோற்சவம் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்ற பத்து நாட்களிலும் கோவில்களில் அதிகாலை வேளையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவந்தது.

அத்துடன், மார்கழி மாதம் பீடை நிறைந்த மாதமாக கருதப்படுவதால் திருவெண்பாவை விரத நாட்களில்  வைகறையில் துயிலெழுந்து நீராடி இறைவனை தரிசித்த பின்  திருவெண்பாவைப் பாடல்களை இசைத்தவாறு ஊர்கள் தோறும் சென்று பள்ளியெழுப்புவது இத்திருவெண்பாவையின் அனுஷ்ட்டான முறைகளில் ஒன்றாக நடைபெற்றுவருகின்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்திரா தீர்த்தோற்சவம் இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது.

இன்று அதிகாலை விசேட யாகபூஜை மற்றும் ஆருத்திரா அபிசேகம் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிநாராயணக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த தீர்த்தோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமி வீதியுலா சென்று மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட அபிசேகம் நடைபெற்று தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து ஆலயத்தில் சிவபுராணம் பாடப்பட்டு சுவாமி வீதிலா வரும் நிகழ்வினை தொடர்ந்து சிவதாண்டவம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நடராஜப்பெருமான் அம்பாள் சகிதம் எழுந்தருளி திருப்பொன்னூஞ்சல் நிகழ்வுடன் திருவெண்பாவை உற்சவம் சிறப்பாக நிறைவுபெற்றது.