அமரர் பிரின்ஸ் காசிநாதர் யாத்திரை முடிந்தது - ஒரு தசாப்தம் நிறைவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ்பூத்த கல்விமானும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதரின் உடலம் இன்று மட்டக்களப்பு ஆலையடிச்சோலை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

93வயதில் காலமான பிரின்ஸ் காசிநாதர் 40 வருடங்கள் ஆசிரிய சேவை மற்றும் அதிபர் சேவையில் பல்வேறு சாதனைகளை படைத்தவராக கருதப்படுகின்றார்.

திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களிலும் ஆசிரிய,அதிபர் சேவையாற்றியுள்ள இவர் இறுதியாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபராக இருந்து கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினையாற்றியுள்ளார்.

இலங்கை மட்டுமன்றி சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கல்விமானாக கருதப்படும் பிரின்ஸ் காசிநாதர் மட்டக்களப்பு மண்ணின் பெருமையினை உலகறியச்செய்தவராகவும் திகழுகின்றார்.

மட்டக்களப்பின் தனிச்சிறப்பான பாடுமீன்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அது தொடர்பிலான தகவல்களை சர்வதேசத்திற்கு கொண்டுசென்ற பெருமையும் இவரையே சாரும்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிறந்த ஊடகவியலாளராகவும் தனது காலத்தில் செயற்பட்டுள்ளார் என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.
1986ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப்.ஊடாக பாராளுமன்றம் சென்ற இவர் 1990ஆம் ஆண்டுவரையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அளப்பெரிய சேவைகளையாற்றியுள்ளார்.

குறிப்பாக 1990ஆம்ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டபோதிலும் கைதுசெய்யப்பட்டபோதிலும் படையினருடனும் ஏனைய தரப்பினருடனும் துணிச்செலுடன் போராடி பல உயிர்களை மீட்டு மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.

அந்த காலப்பகுதியில் அரசியலில் இருந்து விலகி சிவில் சமூக அமைப்புகளில் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தைரியமாகவும் நேர்மையாகவும் தனது கடமையினை இறக்கும் வரையில் மேற்கொண்டுவந்த பிரின்ஸ் காசிநாதர் இறக்கும் வரையில் மட்டக்களப்பு கல்வி சமூகத்திற்கு தனது ஆலோசனையினையும் வழிகாட்டியாகவும் செயற்பட்டுவந்தார்.

அன்னார் நேற்று முன்தினம் இயற்கையெய்திய நிலையில் இன்று காலை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக சடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் அங்கு அவரது உடலத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களினால் அவரின் உடலம் பொறுப்பேற்கப்பட்டு ஊர்வலமாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஒன்றுகூடல் மண்டபத்தில் உடலம் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,தமிழிரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.மயில்வாகனம்,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட பெருமளவானோர் அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையும் நிகழ்த்தினர்.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து மெதடிஸ்த திருச்சபையினரால் இறுதி கிரியைகளுக்கான பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து இறுதி நிகழ்வுகளுடன் ஆலையடிச்சோலைக்கு உடலம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

பேண்ட் வாத்தியங்கள் முழங்க பழைய மாணவர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள்,உறவினர்கள் என பெருமளவானோர்களுடன் சடலம் ஆலையடிச்சோலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கும் இனத்தின் வளர்ச்சிக்கும் இன நல்லுறவுக்காகவும் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிரின்ஸ் காசிநாதரின் ஆத்மா சாந்தியடைய டான் செய்தி பிரிவு பிரார்த்திக்கின்றது.